துவங்கியது வாகன உதிரிபாக கண்காட்சி
புதுடில்லி:பாரத் மொபிலிட்டி வாகன உதிரிபாக கண்காட்சி, புதுடில்லியின் துவாரகா பகுதியில் நேற்று துவங்கியது. இந்தக் கண்காட்சி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் ஜித்தின் பிரசாதா ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
ஏழு நாடுகளில் இருந்து 1,000த்திற்கு அதிகமான வாகன உதிரிபாக நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சி, 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அசல் உபகரண உற்பத்தியாளர்கள், முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வினியோகஸ்தர்கள், பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
உலகளவில் முன்னணி நிறுவனமான, ராபர்ட் பாஷ், டி.வி.எஸ்., குழுமம், பாரத் போர்ஜ், பிரேக்ஸ் இந்தியா, வாலியோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் இதில் அடங்கும். மேலும், 60க்கும் அதிகமான வாகன உதிரிபாக அறிமுகங்கள், வாகனத்துறையின் எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பங்கள், நேரடி வாகன அமைப்பு செயல்பாடுகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி, மின்சார வாகனங்கள், வாகன இணைப்பு தொழில்நுட்பங்கள், பசுமை போக்குவரத்து தீர்வுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது.
கண்காட்சியில், 50,000க்கும் அதிகமான வணிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் பொது மக்களுக்கு திறக்கப்படுகிறது.
உதிரி பாகங்கள் கண்காட்சி.