கனரா வங்கி பெயரில் போலி லிங்க் உலா திறந்தால் வங்கி பணம் அம்பேல் தான்...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. சைபர் குற்றவாளி புதிய புதிய நுாதன வழிகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி மக்களின் பணத்தை அபகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், வாட்ஸ் ஆப்பில் ஏ.பி.கே., கோப்புகளை அனுப்பி பணம் பறிப்பது. தகவல்களை திருடுவது அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக எஸ்.பி.ஐ., பெயரில் போலி லிங்க் உலா வந்த சூழ்நிலையில் தற்போது, கனரா வங்கி பெயரும் போலி லிங்க் வேகமாக உலா வருகிறது.
அந்த ஏ.பி.கே., கோப்பினை திறந்து, டவுன்லோடு செய்ததும், அடுத்த நிமிடமே கனரா வங்கியின் அதிகாரபூர்வமான குழுபோல், அந்த வாட்ஸ் அப் குழு நிறம் மாறி விடுகிறது. அத்துடன் அவர், எந்தந்த வாட்ஸ் அப் குழுக்களில் உள்ளனரா அந்த குழுக்களிலும் அந்த போலி லிங்க் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், கனரா வங்கி பெயரில் ஆதார் புதுப்பிப்பு, கே.ஒய்.சி., புதுப்பிப்பு என உலா வரும் ஏ.பி.கே., கோப்பினை திறக்க வேண்டாம். அப்படி அந்த கோப்பினை டவுன்லோடு செய்திருந்தால், வங்கியின் இணையதள பக்கத்தை பிரதிபலிக்கும் பக்கத்திற்கு வழிவகுக்கும்.
மொபைல் எண், யு.ஐ.டி.ஏ.ஐ., எண், ஏ.டி.எம்., பின் மற்றும் சிவிவி உள்ளிட்ட முக்கியமான விவரங்களை பக்கம் கேட்கும். இந்த தகவலை உள்ளிடும்போது, பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனில் ஓ.டி.பிகள் வரும். அந்த ஓ.டி.பிக்களை உள்ளீடு செய்தால் அடுத்த நிமிடமே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய்விடும்.
எனவே வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வரும் எந்த ஏ.பி.கே., பைல்களையும் திறக்க முயற்சிக்க வேண்டாம்.
ஏற்கனவே டவுன்லோடு செய்து, குழுக்களுக்கு லிங்க் பரவி இருந்தால் அந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியேறி விடுங்கள். அதுவே பாதுகாப்பானது' என்றனர்.