பணிக்கு வராமல் வவுச்சர் ஊழியர்கள் 'டிமிக்கி'

கண்டித்தால் மிரட்டுவதாக பொறியாளர்கள் 'புலம்பல்'

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் நெடுஞ்சாலை, சாலை மற்றும் கட்டடங்கள் மத்திய கோட்டம், பொது சுகாதாரம், கிராமம் மற்றும் வடக்கு என ஏராளமான பிரிவுகள் உள்ளது. இதில், பொறியாளர்கள் மற்றும் 4,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பெரும்பாலும் தினக்கூலி, வவுச்சர் ஊழியர்கள்.

ஒவ்வொரு நெடுஞ்சாலை, மாநில சாலைகள் பராமரிக்க 20 முதல் 30 வவுச்சர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரி - கடலுார், விழுப்புரம் நெடுஞ்சாலை, திண்டிவனம் சாலை, இ.சி.ஆர்., என ஒவ்வொரு சாலை பராமரிப்பு பணியில் தினசரி 30 வவுச்சர் ஊழியர்கள் பணியாற்றுவதாக கணக்கு உள்ளது.

ஆனால் சாலைகளில் ஒரு ஊழியரும் இருப்பது கிடையாது. காலையில் இளநிலை பொறியாளர் முன்பு கூடும் வவுச்சர் ஊழியர்கள் வருகை பதிவு புத்தகத்தில் கையெழுத்து போடுகின்றனர். அதன்பின்பு, பொறியாளர்கள் வீடுகள், தோட்டம், அலுவலகங்களில் பணிக்கு சென்று விடுகின்றனர். சிலர் எம்.எல்.ஏ.,க்களின் கட்சி அலுவலகத்திற்கு சென்று விடுகின்றனர். ஒரு பகுதி ஊழியர்கள் காய்கறி, மீன் கடை, மெக்கானிக் ஷாப்களுக்கு சென்று விடுகின்றனர். சிலர் கெஸ்ட் டிரைவர்களாக பணிக்கு செல்கின்றனர்.

ஏன் பணிக்கு வரவில்லை என பொறியாளர்கள் கண்டித்தால், இரவு நேரத்தில் சில வவுச்சர் ஊழியர்கள் போன் மூலம் மிரட்டுவதாக புலம்புகின்றனர். பொதுப்பணித்துறையில் இவ்வளவு வவுச்சர், தினக்கூலி ஊழியர்கள் இருந்தும் சாலைகள், கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்டவற்றை பராமரிப்பு பணிகள் செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாக அரசியல் பிரமுகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement