காலாப்பட்டு சிறையில் பொங்கல் விழா ரத்து ஏன்?
புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பொட்டல் காடாக கிடந்த காலாப்பட்டு சிறை வளாகம், பசுமை நிறைந்த பகுதியாக பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், மூலிகை தோட்டம் என, மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர சமுதாய ரோடியோ, கைதிகளுக்கான உடற்பயிற்சி கூடம், நுாலகம் திறக்கப் பட்டது.
இவ்வளவு வசதிகள் செய்தும் சிறை கைதிகள் சிலர், சிறை வளாகத்திற்குள் வெளிநபர்கள் மூலம் மொபைல் போன் வீச செய்து அதனை பயன்படுத்துகின்றனர். போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் நடத்திய சோதனையில் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் சிறையில் தேவையற்ற கொண்டாட்டங்களை ரத்து செய்வதின் மூலம் மொபைல்போன் நடமாட்டத்தை குறைக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, சிறையில் வழக்கமாக நடக்கும் சமத்துவ பொங்கல் விழா இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.
காணும் பொங்கல் அன்று விசாரணை மற்றும் தண்டனை கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது.