அடிக்கடி அரசு பஸ் பழுது தவிக்குது தாராப்பட்டி

சோழவந்தான்: மதுரை மேற்கு தொகுதி துவரிமான் அடுத்த தாராப்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வழியில் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலக்கால் மெயின் ரோட்டின் பிரிவிலிருந்து இக்கிராமத்திற்கு 2 கி.மீ., செல்ல வேண்டும். பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் காலை 6:30 முதல் இரவு 10:00 மணி வரை 9 நடைகள் பஸ்கள் இயக்கப்பட்டன.

கொரோனாவிற்குப் பின் காலை 6:30, மதியம் 12:30, இரவு 10:00 மணி பஸ்கள் வருவதில்லை. கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் பழுதாகி வழியில் நிற்கிறது.

மேலும் மாற்றாக இயக்கப்படும் பஸ்களும் பழுதாகி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

முத்து: எங்கள் கிராம குறுகலான ரோட்டில் ஒரு பஸ் வந்தால் எதிரில் டூவீலர் கூட செல்ல முடியாது. இந்நிலையில் நடு ரோட்டில் வாரம் ஒரு முறை பஸ்கள் பழுதாகி நின்று விடுகிறது. நேற்று காலை 7:30க்கு பழுதான பஸ்சை தள்ள முடியவில்லை. இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் ஒருமணி நேரம் காத்து கிடந்தன. டெப்போவிற்கு பழுது பார்க்க வரும் வெளியூர் பஸ்களை கிராமத்திற்கு அனுப்பி மக்களை அவதிக்குள்ளாக்கி வருகின்றனர் என்றார்.

Advertisement