சீனா செல்ல டிரம்ப் விருப்பம்? இந்தியாவிற்கு வருவாரா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டொனால்ட் டிரம்ப், சீனா செல்ல தனது ஆலோசகர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவிற்கு செல்வதற்கான சாத்தியம் குறித்தும் பேசி உள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் நாளை( ஜன.,20) பதவியேற்க உள்ளார். பிரசாரத்தின் போது அவர் சீனாவை விமர்சித்து வந்தார். அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என கூறி வந்தார்.
சமீபத்தில் அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியிருந்தார். பதவியேற்பு விழாவிற்கு வரும்படி சீன அதிபருக்கு அமெரிக்கா முறைப்படி அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்கா நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: சீனா உடனான உறவை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, அமெரிக்கா அதிபராக பதவியேற்றதும், அந்நாட்டிற்கு செல்ல விரும்புவதாக டிரம்ப் தனது ஆலோசகர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், அவர்களிடம் இந்தியாவிற்கு செல்வது குறித்தும் விவாதித்து உள்ளார் என டிரம்ப் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.