அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை மதுரையில் அண்ணாமலை பேச்சு

1

மதுரை: ''அரசியல் இல்லாமல்எதுவும் இல்லை. அரசியலில் மாற்றம், புரட்சி தேவை,'' என, மதுரையில் நடந்த உலகளாவிய தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

'தொழில் முனைவோர் பாதையில் தலைமைத்துவம், புதுமை புகுத்துதல்,' தலைப்பில் அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில் பிறந்து கடல் தாண்டி பொருளாதாரம் ஈட்டியுள்ளீர்கள். பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய முயற்சிக்கிறீர்கள். தமிழ் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும் உங்களை பாராட்டுகிறேன்.

அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அரசியலுக்கு நல்லவர்கள் வரவில்லை. அரசியலை தவறான பாதை என்கின்றனர். அதை உடைக்க முயற்சிக்கிறேன். தற்போது கொள்கை சார்ந்த அரசியலை பேசும் நிலை உள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் உலக பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுஉள்ளது. இந்தியாவின் சராசரி வளர்ச்சி 6.7 சதவீதம் இருக்கும் என தெரிவிக்கிறது. அடுத்த 23 ஆண்டுகளில் நாம் 13 மடங்கு வளர வேண்டும். கிராமங்களில் ஆடு மேய்த்தல் உள்ளிட்ட பல தொழில்களுக்கு இணைப்பு பாலமாக செயல்பட யாரும் இல்லை.

இந்தியாவில் ஒரு தனி மனிதனின் உழைக்கும் திறனை பொறுத்தவரை, ஒரு மணிநேரம் வேலை செய்தால் 8 டாலர் வருவாய் ஈட்டுகிறார். இதை உயர்த்தாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. அமெரிக்காவில் தகுதி, திறமைக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இலவசங்களுக்கு மக்களை பழக்கப்படுத்தியுள்ளனர். இதற்காக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அதாவது பட்ஜெட்டில் 3 ல் 1 பங்கு செலவிடப்படுகிறது. இச்சூழலில் எப்படி சாலை உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்ற முடியும். கடன், வட்டி செலுத்த ரூ.80 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. மீதி ரூ.30 ஆயிரம் கோடியை வைத்து எப்படி அரசு நிர்வாகத்தை நடத்த முடியும்.

கிராமங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஓட்டை உடைசலான வாகனங்கள் உள்ளன. பெண்களின் பாதுகாப்பிற்கு 24 மணி நேர ரோந்து வாகனங்கள் உள்ளனவா, அவசிய தேவைகளுக்கு செலவிட வேண்டிய பணம் எங்கோ பல வழிகளில் செலவிடப்படுகிறது என்றார்.

எஸ்.ஆர்.எம்.,இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி நிறுவனர் பாரிவேந்தர், மனித நேயம் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement