மதுரை அரசு மருத்துவமனையில் தண்ணீர்க்கசிவால் பாதிப்பு ஆனாலும் 'பில்டிங் ஸ்ட்ராங்கு'
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து சிகிச்சை கட்டட வளாகத்தின் பின்புறம் தொடர்ந்து நீர்க்கசிவு ஏற்படுவதால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது.
முதல் மாடி, 2வது மாடிக்கு தண்ணீர் செல்லும் பி.வி.சி., குழாய்களும் அருகருகே வார்டுகளுக்கு செல்லும் 'வி' வடிவ இணைப்பு குழாய்கள் 15 ஆண்டுகளை கடந்த நிலையில் நீர்க்கசிவை ஏற்படுத்துகிறது.
2வது மாடியில் இருந்து இணைப்புக் குழாய்கள் வழியாக சுவரில் நிரந்தரமாக தண்ணீர் கசிகிறது. சுவரின் வெளிப்புற பெயின்ட் உதிர்ந்து பாசி படிந்து உட்பகுதி சுவரில் நிரந்தரமாக ஈரம் படிந்துள்ளது. கட்டடம் கட்டி 17 ஆண்டுகளான நிலையில் தண்ணீர்க்கசிவால் கட்டடம் நிரந்தரமாக பாழடைய வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர்க்கசிவு அதிகமாகும் போது வார்டுகளுக்குள் தண்ணீர் கசியலாம்.
கீழ்த்தளத்தில் எலும்பு மூட்டு பிரிவுக்கான புறநோயாளிகள் வார்டில் மழைநீர் வடிகால்கள் முறையாக மூடப்படவில்லை. பொருந்தாத சிமென்ட் சிலாப்புகளால் பெயருக்கு மூடியுள்ளதால் பெரும்பாலான வடிகால் பகுதி திறந்த நிலையில் உள்ளது. கை, கால்களில் அடிபட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் தான் இங்கு அமர்கின்றனர்.
மேலும் புறநோயாளிகள் பிரிவில் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். சிமென்ட் இருக்கைகளைத் தாண்டி சில நேரங்களில் கூட்டம்வெளியில் நிற்பதால் மழைநீர் வடிகாலுக்கு சரியான சிமென்ட் சிலாப் பொருத்தினால் அதையும் நோயாளிகள் இருக்கையாக பயன்படுத்த முடியும். மழைக்காலத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்க முடியும்.
சிறு சிறு விஷயங்களில் பொதுப்பணித்துறையினர் கவனம் செலுத்தினாலே கட்டடத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.