பாதுகாப்பாக நடந்ததா பலுான் திருவிழா?  

1

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த சர்வதேச பலுான் திருவிழா உரிய பாதுகாப்புடன் நடத்தப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.


தமிழக சுற்றுலாத்துறை, 'குளோபல் மீடியா பாக்ஸ்' சார்பில், 10வது தமிழ்நாடு சர்வதேச வெப்ப பலுான் திருவிழா, கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் கடந்த, 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை நடந்தது.


இரண்டு முறை தமிழக எல்லையை தாண்டி, கேரளா மாநிலம், பாலக்காடு கன்னிமாரி முள்ளந்தோடு, வடவன்னுார் வட்டச்சிறை என்ற பகுதியில் உள்ள வயல்களில் பலுான் இறங்கியதால் பதட்டம் ஏற்பட்டது. வயல்வெளியில் இறங்கியதற்கு எரிபொருள் தீர்ந்தது தான் காரணம் என கூறப்பட்டது.


பலுான் பாதுகாப்போடு இயக்கப்படுகிறதா; மின்வழித்தடம், மரம், ஆறு உள்ளிட்ட இடங்களில் இறங்கினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உரிய அனுமதி பெற்றுதான் நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா என கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.

'பறந்த' அதிகாரிகள்



ஒருங்கிணைப்பாளர் பெனடிக் சேவியோ கூறியதாவது:

அனுபவம் வாய்ந்த பைலட்களை கொண்டே, பலுான் பறக்க விடப்பட்டது. பைலட்டுகளுக்கு இன்சூரன்ஸ் உள்ளது. பலுான்கள் வானில் பறப்பதை பார்த்து ரசிக்க மட்டுமே அனுமதியுள்ளது.

பலுானில் அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள், நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் விருப்பபடி மட்டுமே சென்றனர்.


விமானத்துறைக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பாக பலுான் தரை இறக்கப்படும். கேரளாவில், இரு முறை வயலில் தரையிறக்கப்பட்டாலும் எவ்வித சேதமும் இல்லை. இடத்தை தேர்வு செய்தே பலுான் தரையிறக்கப்பட்டது. எரிபொருள் தீர்ந்தது என கூறுவது தவறனாதாகும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

விதிமீறல் இல்லை



வெளிநாடுகளில் மட்டும் நடைபெறும் பலுான் திருவிழா, தமிழக சுற்றுலாத்துறை சார்பில், 10வது ஆண்டாக நடத்தப்பட்டது. ஜெர்மன், லண்டன், பெல்ஜியம், ஜப்பான் உள்ளிட்ட, 12 நாடுகளை சேர்ந்த சர்வதேச உரிமம் பெற்ற அனுபவம் வாய்ந்த பைலட்கள், அவர்களுக்கு சொந்தமான, 12 பலுான்களை கொண்டு வந்தனர்.


இந்த பலுானில், ஒரு பைலட், அவருக்கு உதவியாளர், இரண்டு சிலிண்டர்கள் இருக்கும். பலுான்கள், சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் மட்டுமே இயக்கப்பட்டன. மருத்துவம், விமான போக்குவரத்து, தீயணைப்பு துறைகளின் தடையில்லா சான்று பெற்றுதான் நடத்தப்படுகிறது.


மழை, காற்றின் வேகம், காலநிலை, பறக்கும் திசை பார்த்து, பலுான் பறக்க விடப்பட்டது. பொள்ளாச்சியில், 'குளோபல் மீடியா பாக்ஸ்' நிறுவனம் வாயிலாக, 10 ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. பைலட் அழைத்து வருவது; டிக்கெட் செலவு, அவர்கள் தங்குவதற்கான இடம், தன்னார்வலர்களை நியமிப்பது என தனியார் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

-

- ஜெகதீஸ்வரி,

மாவட்ட அலுவலர்,

சுற்றுலாத்துறை



யார் பொறுப்பு?

சாதாரணமாக ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால், தீயணைப்பு துறையினர் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிப்பது வழக்கம்.ஆனால், பலுானில் பறக்க யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில், விதிமுறை மீறி அரசு துறை அதிகாரிகள், ஸ்பான்சர் நிறுவனங்கள் என்ற பெயரில் சிலர் பறந்துள்ளனர். பைலட்டுக்கு இன்சூரன்ஸ் இருக்கு. மக்கள் பறப்பதற்கு அனுமதியில்லாத நிலையில், அவர்களுக்கு இன்சூரன்ஸ் இருக்காது. இதில், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால், யார் பொறுப்பு என்பது தெரியவில்லை.இந்த விழாவுக்கு சுற்றுலா துறை எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பதும் தெரியவில்லை. இதனால், ஊருக்கு என்ன பயன், சுற்றுலா துறையில் என்ன மேம்பாடு ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை.

Advertisement