நகராட்சி பகுதி தெருநாய்களுக்கு 6 மாதத்தில் கருத்தடை செய்ய இலக்கு கால்நடை இணை இயக்குனர் தகவல்

தேனி: நகராட்சி பகுதிகளில் திரியும் தெருநாய்களுக்கு ஆறு மாதத்தில் கருத்தடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கால்நடை துறை இணை இயக்குனர் கோயில் ராஜா தெரிவித்தார்.

மாவட்டத்தில் பல பகுதிகளில் தெருநாய்கள் தோல் நோயினால் பாதித்து முடி முழுவதும் உதிர்ந்து காணப்படுகிறது.

நோய் பாதித்த நாயிடமிருந்து பிற நாய்களுக்கும் விரைவாக பரவி வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட தெருநாய்கள் பல இடங்களில் சுற்றி வரும் போது, அவற்றிடமிருந்து மனிதர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது.

இதனால் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள், குழந்தைகள், முதியவர்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதுடன், இந்நோய் பாதித்த தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் கோயில்ராஜா கூறுகையில்,மாவட்டத்தில் தேனி, கம்பம், போடி, சின்னமனுார் நகராட்சிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கூடலுார், பெரியகுளத்தில் அமைக்க நகராட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருத்தடை செய்ய தெருநாய்களை பிடித்து வரும் போது, இவ்வாறு தோல் நோய் பாதிக்கப்பட்ட நாய்களை பிடித்து வந்தால் சிகிச்சை அளிக்கப்படும். ஆறு மாதத்தில் நகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதனை தொடர்ந்து ஊரக பகுதிகளில் பணியை துவங்க உள்ளோம்.என்றார்.

Advertisement