பதட்டம் ஏற்படுத்தும் படையப்பா கண்காணிக்க கோரிக்கை

மூணாறு: மூணாறு பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் படையப்பா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இப்பகுதியில் நடமாடும் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். சாதுவான படையப்பா அவ்வப்போது ஆக்ரோஷமாக மாறுவது வழக்கம். அதனால் அதன் குணாதிசயம், நடமாட்டம் ஆகியவற்றை கணிப்பது வனத்துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு பெரும் சவாலாக உள்ளது.கடந்த இரண்டு வாரங்களாக படையப்பா தனது வழக்கமான வழித்தடத்தில் அடிக்கடி சுற்றி வருவதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் சோலைமலை டிவிஷன் செல்லும் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வாகனங்களை வழிமறித்த படையப்பா நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பழையகாடு டிவிஷனுக்கு சென்றது. அங்கு காலை 7:15 மணி வரை நடமாடிய படையப்பா தொழிலாளர்களின் காய்கறி தோட்டங்கள், வாழை ஆகியவற்றை சேதப்படுத்தியது. அதன்பிறகு காலை 7:50 மணிக்கு பொறியியல் கல்லூரி பகுதிக்கு சென்றதால், அப்போது அந்த வழியில் பணிக்கு சென்றவர்கள் யானையை பார்த்து ஓடி உயிர் தப்பினர். பதட்டத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் நடமாடும் படையப்பாவை வனத்துறையினர் கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

Advertisement