மாவட்டத்தில் தொடரும் குட்கா சோதனை கண்டுகொள்ளப்படாத மொத்த விற்பனை
கம்பம்: தேனி மாவட்டத்தில் பரவலாக குட்கா விற்பனை தடுப்பு நடவடிக்கை தொடர்ந்தாலும் மொத்த விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் தினமும் புகையிலை பறிமுதல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தற்போது புகையிலை விற்பவர்களை ரிமாண்ட் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. தொடர்ந்து குட்கா விற்கும் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
ஆனாலும் நகரம், கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் குட்கா,புகையிலை விற்பனை எந்தவித தடங்கலின்றி விற்கப்படுகிறது.
பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்வது யார், எங்கிருந்து வருகிறது என்பதை கண்காணிப்பது உளவு பிரிவு, தனிப்பிரிவு போலீசாருக்கு பெரிய விஷயமல்ல.
ஆனால் ஏனோ இதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் லாரிகள், சரக்கு வாகனங்களை தீவிர சோதனைக்குட்டுத்தினாலே குட்கா மாவட்டத்திற்குள் வருவதை தடுத்து விடலாம். ஆம்னி பஸ்கள், ரயில்வே ஸ்டேசன்களிலும் கண்காணிப்பு செய்தால் புகையிலை முழுமையாக ஒழிக்க முடியும்.
இங்கு சோதனைகளை தீவிரப்படுத்தி மொத்த வியாபாரி யார், இவர்களின் தொடர்பு எங்குள்ளது என்பதை பற்றி ஆய்வு செய்யாமல் சிறிய பெட்டிக்கடைக்காரர்களை மட்டும் குறி வைப்பது முழு பலனை தராது.
குட்கா சப்ளையின் ஆணி வேர்களை அகற்றாத வரை குட்கா விற்பனை மாவட்டத்தில் தடுப்பது சிரமமாகும். கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவதில் எஸ்.பி. சிவபிரசாத் தீவிரம் காட்டுகிறார். அதே சமயம் குட்கா, புகையிலை மாவட்டத்திற்குள் எப்படி நுழைகிறது என்பதை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் .அப்போது தான் புகையிலை விற்பனையை ஒழிக்க முடியும்.