தேனி அருகே சிறுத்தை நடமாட்டமா: மக்கள் பீதி

தேனி: தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் சிறுத்தை நடமாடியது போன்ற வீடியோ பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி ஒன்றியத்திற்கு உட்பட்டு வெங்கடாசலபுரம் கிராமமத்தில் ஜன.,14 அன்று சிறுத்தை போன்ற உருவம் காலை 8:00 மணிக்கு ரோட்டை கடந்து சென்றதாக பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவில் இக் காட்சி பதிவானது. இந்த வீடியோ பதிவு நேற்று வாட்ஸ் ஆப்களில் பரவியது.

சிறுத்தை நடமாட்டம் என வெங்கடாச்சலபுரம், கோவிந்தநகரம், ஸ்ரீரங்காபுரம் அருகில் உள்ள கிராம மக்கள் பீதியடைந்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறை, ஸ்ரீவி., மேகமலைபுலிகள் காப்பகத்தினர் கிராமங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சின்னமனுார் வனச்சரகர் சிவாஜி கூறுகையில், 'வெங்கடாசலபுரம் பகுதியில் நடமாடியது சிறுத்தை பூனையாக இருக்கலாம். இதற்கு முன் அப்பகுதியில் சிறுத்தை, சிறுத்தை பூனை வந்து சென்றதில்லை. தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளோம். இருநாட்களாக எதுவும் தென்படவில்லை. நடமாட்டம் தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கூறி வருகிறோம்', என்றனர்.

Advertisement