டில்லியை கலங்கடித்த தொடர் கொலைகாரன் தலைமறைவு: 17 மாதங்களுக்கு பிறகு கைது

3

புதுடில்லி: டில்லியில் தொடர் கொலை சம்பவங்களில் கைதான குற்றவாளி, பரோலில் வந்து தலைமறைவானான். 17 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு அவனை போலீசார் கைது செய்தனர்.



டில்லியில் கடந்த 2006 முதல் 2007ம் ஆண்டுகளில் தொடர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு கலங்கடித்தவன் சந்திரகாந்த் ஜா(58). இவன், இறைச்சி சாப்பிட்டது, மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக சிலரை தொடர்ச்சியாக கொலை செய்துள்ளான்.



அத்துடன், உடலை சிதைத்து திஹார் சிறை வாசலில் போட்டதுடன், தன்னை முடிந்தால் கைது செய்யும்படி போலீசாருக்கு சவால் விட்டு கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்து இருந்தான். நீண்ட தேடுதலுக்கு பிறகு அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2023ம் ஆண்டு ஆக., மாதம், தனது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் எனக்கூறி, பரோலில் சென்றான். அது முடிந்து நவம்பர் மாதம் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால், தலைமறைவானான். அவனை போலீசார் தேடி வந்தனர். இவன் குறித்து தகவல் தந்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் எனக் அறிவித்து இருந்தனர்.



இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜன.,17) அன்று டில்லி பழைய ரயில் நிலையம் பகுதியில் சந்திரகாந்த் ஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: சந்திரகாந்த் ஜா போலீசிடம் சிக்காமல் இருக்க தனது தோற்றத்தை மாற்றியதுடன், வீட்டிற்கு செல்லாமல் பல்வேறு வழிபாட்டு தலங்களில் தங்கி உள்ளான். அங்கு வரும் பக்தர்கள் தரும் உணவை சாப்பிட்டு வந்துள்ளான்.


அலிப்பூர் பகுதிக்கு சென்று இரவு நேரத்தில் சென்று வேறு யாரும் பார்க்காத நேரங்களில் மனைவியை பார்த்து வந்துள்ளான். டில்லி பழைய ரயில் நிலையத்தில் இருந்து பீஹாருக்கு தப்பிச் செல்ல முயன்றான். எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் 17 மாதங்களுக்கு பிறகு அவனை கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement