நக்சல்களுக்கு பின்னடைவு: முக்கிய தலைவர்கள் உட்பட 18 பேர் பலியானது உறுதி
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கடந்த 16ம் தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் நக்சல்களில் முக்கிய தலைவர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அந்த அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில், ஜன., 16ல் மாவட்ட ரிசர்வ் போலீசார், உள்ளூர் போலீசாரை உள்ளடக்கிய பாதுகாப்பு படையினரின் கூட்டுக்குழுவினர் நக்சல் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர். காலை துவங்கிய இந்த வேட்டையின்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். மாலை வரை நடந்த இரு தரப்பினர் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக நக்சல்கள் அறிக்கைகள் மூலம், தெலுங்கானாவில் நக்சல் அமைப்பின் செயலர் பதே சோகா ராவ் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: தெலுங்கானாவில் தங்களின் முக்கிய தலைவராக செயல்பட்ட நபர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நக்சல்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அவர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவு ஆகும். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவகாரத்தில் இருந்து திசைதிருப்பவும், கிராம மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டு உள்ளனர் என பொய் கூறுகின்றனர். ஆனால், இது உண்மை அல்ல.
கொல்லப்பட்ட தாமோதர் மீது 90 வழக்குகள் உள்ளன. அவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர். கடந்த 1980ம் ஆண்டுகளில் நக்சல் இயக்கத்தில் சேர்ந்து ஆதிக்கம் செலுத்த துவங்கினார். அவரது சகோதரரும் அந்த அமைப்பில் பல பதவிகளில் இருந்தார். இவர்கள் கடந்த 2013ல் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.