வாடிக்கையாளர்கள் நாமினி நியமனம் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., உத்தரவு

புதுடில்லி:அனைத்து விதமான டிபாசிட் கணக்குகள் மற்றும் லாக்கர்கள் வைத்துள்ள வாடிக்கையாளர்களும், நாமினிகள் நியமிப்பதை உறுதிப்படுத்துமாறு, வங்கி களை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

பல்வேறு கணக்குகளுக்கு நாமினிகள் நியமிக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆர்.பி.ஐ., நாமினிகளை நியமிப்பதால் உள்ள பலன்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக் கூறுமாறு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வங்கி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும்; படிவங்களில் நாமினி குறித்து குறிப்பிட வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வுசெய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

வங்கிக் கணக்கு வைத்துள்ள நபர் மரணம் அடையும்பட்சத்தில், அவர்களது சேமிப்புகளை குடும்பத்தினர் சிரமமின்றியும், விரைவாகவும் பெறுவதற்கு ஏதுவாக, அனைத்து வாடிக்கையாளர்களிடமும் நாமினி தகவல்களை பெற, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகளின் இயக்குனர் குழுவில் உள்ள வாடிக்கையாளர் சேவை குழு, இதுதொடர்பான முன்னேற்றங்களை ஆராய்ந்து, வரும் மார்ச் மாதம் துவங்கி, ரிசர்வ் வங்கியின், 'தக்ஷ்' போர்ட்டலில் காலாண்டுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், இதுதொடர்பாக வங்கி பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு நின்றுவிடாமல், 100 சதவீதம் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும்; விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement