சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி டிசம்பரில் 26 சதவீதம் சரிவு

புதுடில்லி:சீனாவுக்கான இந்திய சரக்கு ஏற்றுமதி கடந்த மாதம் கடுமையாக சரிந்துள்ளது. இந்திய ஏற்றுமதிகளில் முக்கிய பங்கு வகிக்கும் 10 நாடுகளில் சீனா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளுக்கான ஏற்றுமதி கடந்த மாதம் குறைந்துள்ளது.

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில் 1 சதவீதம் சரிந்து 3.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

நாடு வாரியாக பார்க்கும்போது, சீனாவுக்கான சரக்கு ஏற்றுமதி 26.15 சதவீதம் கடந்த மாதம் சரிந்துள்ளது.

இந்திய பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா தொடர்கிறது. சரிவை சந்தித்துள்ளபோதிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சீனா, அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகள் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 51 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

இறக்குமதியை பொறுத்தவரை சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து கணிசமாக அதிகரித்துள்ளது. அதிக தங்க இறக்குமதியின் காரணமாக சுவிட்சர்லாந்து இறக்குமதிகள் கடந்த மாதம் 85.65 சதவீதம் வளர்ச்சியடைந்தன.

அமெரிக்க, சீன ஏற்றுமதிகள் தலா 10 சதவீதம் அதிகரித்தன. நாட்டின் மொத்த சரக்கு இறக்குமதி 4.90 சதவீதம் கடந்த டிசம்பரில் அதிகரித்து, 5.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement