குடியிருப்பு பகுதியில் 'குடி'மகன்கள் அட்ராசிட்டி

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சிங்கையன்புதூரில் உள்ள குடியிருப்பு பகுதியில், பாதுகாப்பு இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் சிங்கையன்புதூர் அருகே உள்ள, வி.ஐ.பி., நகர் குடியிருப்பு பகுதியில் முறையான பாதுகாப்பு வசதி இல்லை. 'குடி'மகன்கள் சிலர் குடியிருப்பு பகுதியில், மது குடித்து விட்டு காலி பாட்டில்கள், மீதமான உணவு பொட்டலங்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை வீசி செல்கின்றனர்.

இது மட்டுமின்றி, குடியிருப்பு பகுதியில் பைக்குகளை வேகமாக இயக்கி சாகசம் செய்கின்றனர். இதனால், ரோட்டின் வளைவு பகுதியில் விபத்து ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதியில் மது அருந்துவதை தவிர்க்க, குடியிருப்பு பகுதியில் வேலி அல்லது சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மக்கள் கூறியதாவது:

குடியிருப்பு பகுதியை சுற்றிலும், விளை நிலங்களாக உள்ளது. விவசாயிகள் தோட்டத்து சாளைகளில் வசிக்கின்றனர். குடியிருப்பு பகுதியில் அமர்ந்து மது குடிப்பவர்கள், பிளாஸ்டிக் டம்ளர், உணவு பொட்டலங்களை வீசிச் செல்கின்றனர். இதை கால்நடைகள் உண்பதால், பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், பிளாஸ்டிக் குப்பை காற்றுக்கு பறந்து, வீடுகள் முன்பாக குவிகிறது. அருகிலுள்ள விளை நிலங்களும் பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் அதிகம் பாதிக்கின்றன.

எனவே, இப்பகுதியில் அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, 'குடி'மகன்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement