மடத்துக்குளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் துவக்கம்

உடுமலை : மடத்துக்குளம் தாலுகாவில், பேப்பர் மில், நுாற்பாலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும், விவசாய நிலங்களும் அதிகளவு உள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு என உடுமலை அல்லது பழநியிலிருந்து, வாகனம் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் வர வேண்டிய சூழல் இருந்தது.

இதற்கு தீர்வு காண மடத்துக்குளத்தில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக தொழில் துறையினர் வலியுறுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசு, மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க அனுமதியளித்தது.

இதனையடுத்து, மடத்துக்குளம் பகுதியில் வாடகை கட்டடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைய அலுவலர், வாகனம் ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து, மடத்துக்குளம் தீயணைப்பு நிலையம் துவக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர்கள், எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement