காமராஜர் விருதுக்கு தேர்வான பள்ளிக்கு காசோலை வழங்கல்

பொள்ளாச்சி : நெகமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, காமராஜர் விருதுக்கு தேர்வான நிலையில் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

தமிழகத்தில், முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

அதில், பள்ளிகளின் கட்டமைப்பு, சுற்றுப்புற சுகாதாரம், வகுப்பறை வசதி, மாணவர் சேர்க்கை, குடிநீர் வசதி மற்றும் மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கண்டறியப்படுகிறது.

இந்த விருதுக்கு தேர்வாகும் தொடக்க பள்ளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு, 75 ஆயிரம் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2024 - 25ம் கல்வியாண்டில், பொள்ளாச்சி அருகே - நெகமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊக்குவித்தல் சார்ந்து பரிசளிப்பு திட்டம் வாயிலாக, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தங்கராசு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சார்மிளா, வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலையில் தலைமையாசிரியர் கோமதியிடம் வழங்கினார். தொடர்ந்து, மாநில அரசின் கேடயமும் பெறப்பட்டது.

Advertisement