வடிகால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்
திருத்தணி:திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் காலை, 10:30 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருத்தணி நகரத்தில் ம.பொ.சி.சாலை, ரயில்வே நிலையம் மற்றும் பைபாஸ் ஆகிய பகுதிகளில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கின.
இதனால் மக்கள் மற்றும் பயணியர் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் கனமழையால், முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர்.
அதே போல் திருத்தணி ஒன்றியம் காசிநாதபுரம் கிராமத்தில் நேற்று கனமழை பெய்தால், அம்மன் கோவில் தெரு மற்றும் சந்துதெரு ஆகிய இடங்களில் மழைநீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் தெருக்களில் குளம்போல் மழைநீர் தேங்கியிருந்தால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.
ஒன்றிய நிர்வாகம் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.