ரிப்போர்ட்டர் லீக்ஸ்
பேனர் வைக்க மட்டும் போட்டி!
'ஆல்கொண்டமால் கோவில் நோன்பு வந்தாலே கட்சிக்காரங்க தொல்லை தாங்க முடியல,' என பெதப்பம்பட்டி நால்ரோட்டில், விவசாயிகள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேச்சை கவனிச்சேன்.
ஆல்கொண்டமால் கோவில் நோன்புக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தாங்க. சவாரி வண்டிகள், சலகெருதுகளும் வந்தன. ஆனா, எந்த கட்சிக்காரங்களும் மக்களுக்கு எந்த வசதியும் செஞ்சு தரல.
ஆனா, நால்ரோட்டுல இருந்து கோவில் வரைக்கும் பேனர் வைக்கறதுக்கும், கொடி கட்டறதுக்கும் மட்டும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,காரங்க சண்டை போடுறங்க.
இந்த தடவை அ.தி.மு.க.,காரங்க தங்களோட பேனரை மறைச்சு, ஆளுங்கட்சி கொடி கட்டிட்டாங்கனு போராட்டம் பண்ணினாங்க.
சமரசம் பேச போன, வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸ்காரங்களும், எல்லா பேனரையும் எடுக்க சொல்லாம அமைதியா வந்துட்டாங்க. அப்புறம் பேனருக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டாங்க. ஆக மொத்தம், பக்தர்களும், வண்டியில வந்தவங்களும் சிரமப்பட்டாங்க.
நெறயா இடத்துல விலகிப்போக வழியில்லாம, நெரிசல்ல திணறுனாங்க. பேனர் வைக்க போட்டி போடற கட்சிக்காரங்க, பக்தர்களுக்கு வசதி செய்யறதுக்கு போட்டி போட்டா நல்லா இருக்கும்.
அதிகாரிங்களும், கட்சி பார்க்காம நடவடிக்கை எடுத்தா மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்னு பேசிக்கிட்டாங்க.
செய்தி வந்தா ஆசிரியர்களுக்கு 'டோஸ்'
உடுமலையில் உள்ள அரசு பள்ளிகளில் என்ன தான் நடக்குதுனு தெரிஞ்சுக்க, பள்ளிக்குள் நுழையும்போதே... 'அய்யோ வராதீங்க, உங்கிட்ட நாங்க பேசவே கூடாதென,' ஆசிரியர்கள் வெளியே வந்தனர்.
என்ன விஷயம்னு கேட்டபோது, 'அரசு பள்ளிகள்ல பத்திரிகைகாரங்க நுழையவே கூடாது. அது விழாவோ, வேற ஏதாவது நிகழ்ச்சி இருந்தாலோ பத்திரிகைகாரங்கள கூப்பிடாதீங்கனு சொல்லிட்டாங்க.
அது மட்டுமல்ல, ஒரு அரசு பள்ளிய பத்தி செய்தி வந்துச்சுனா, அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு 'டோஸ்' விடுறதோட, எப்படி செய்தி வந்ததுனு, கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் கேக்கறாங்க. இந்த மாதிரி வேற எந்த வட்டாரத்துலயும் நடக்குதானு எங்களுக்கு தெரியல. இந்த வட்டாரத்துல இங்க மட்டும் தான் நடக்குதுனு, சொல்லி கேட் வரைக்கு வந்து அனுப்பி வச்சாங்க.
பள்ளி வளர்ச்சிலயும், கல்வி போதிக்கறதிலும், மாணவர்கள் பாதுகாப்பிலும், கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காம, பள்ளி பத்தின செய்தி வந்தறக் கூடாதுங்கறதுல கவனமா இருக்காங்களேனு நெனச்சுட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
கோவில் வருமானம் எங்கே போகுது?
கிணத்துக்கடவு பக்கத்துல இருக்கிற சொக்கனூருக்கு நண்பரை சந்திக்க சென்றேன். அப்போ பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த இருவர் பேசிக் கொண்டிருந்தனர். அதில், ஒருவர் நம்ம ஊரு கருப்பராயன் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் நிறைய பேரு அவங்க வீட்டு விசேஷத்தை நடத்துறாங்க. இதுக்கு பணமும் கம்மியா தான் கோவில் நிர்வாகம் வசூலிக்குதுன சொன்னாரு.
அதுக்கு மற்றொருவர், கருப்பராயன் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்கு. இந்தக்கோவில் நிர்வாகி, கோவிலுக்கு சொந்தமான மண்டபத்துல நடக்குற சுப நிகழ்ச்சிக்கு பணம் வசூலிக்கறாரு. ஆனா, யாருக்கும் முறையா ரசீது கொடுக்க மாட்டாரு.
இது மட்டுமா கோவில் விசேஷம்னு வந்துட்டா, ஊரெல்லாம் பணம் வசூல் பண்ணி விழா நடத்துவாரு. ஆனா, அறநிலையத்துறைக்கு கணக்கு மட்டும் கொடுக்க மாட்டாரு. இதனால, இந்த கோவில் வருமானம் எவ்வளவுனு யாருக்குமே தெரியாது.
அதுக்கு இன்னொருத்தரு, என்னப்பா இவ்வளவு விஷயம் இருக்குதா. இத அறநிலையத்துறை அதிகாரிக கவனிச்சா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க. நண்பர் வந்ததும், நானும் அங்கிருந்து கிளம்பினேன்.
அரசு வாகனத்துல குடும்பத்தார் சுற்றுலா
வால்பாறைக்கு, நிறைய அரசு வாகனங்கள் வரிசை கட்டி போச்சு. ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாராவது வர்றாரா, அமைச்சர் வர்றாரானு, தாலுகா ஆபீஸ்ல இருந்த அதிகாரி ஒருத்தரு கிட்ட விசாரிச்சேன். அவரு சொன்னதில் இருந்து...
ஊட்டி, கொடைக்கானலை அடுத்து வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வர்றாங்க. அதே மாதிரி, பல்வேறு அரசு துறை அதிகாரிகள், அவங்களோட உறவினர்களை அரசு வாகனத்துல சுற்றுலா அழைச்சுட்டு வர்றாங்க.
உறவினர்கள் தங்கிச்செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக, விடுதி மற்றும் உணவு வசதிகள செஞ்சு கொடுக்கறாங்க. பொங்கல் தொடர் விடுமுறையில, அரசு வாகனத்துல வால்பாறைக்கு சுற்றுலா வந்தாங்க.
தமிழக அரசின் சார்பில, ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தற வாகனத்த, சுற்றுலா வாகனமா பயன்படுத்திணாங்க.
அரசு வாகனங்கள விதிமுறைய மீறி பயன்படுத்தும் அதிகாரிகள, அரசு கண்காணித்து, நடவடிக்கை எடுக்கணும். அப்ப தான், அரசாங்க வாகனத்தை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தறது குறையும்னு, சொன்னாங்க.
அரசு பஸ் இயக்கும் ஒப்பந்த ஊழியர்கள்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு, அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் நண்பர்கள சந்திச்சேன். 'என்னங்க, எங்களுக்கெல்லாம் வேலையே இல்லாம போயிடும் போலிருக்கு, உங்களுக்கு விஷயம் தெரியுமானு, கேட்டாங்க. என்ன நடந்துச்சுனு அவங்க கிட்ட விசாரிச்சேன்.
அரசு போக்குவரத்துக்கழகம், கோவை கோட்டத்துல, ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுது. இதுல, நிரந்தர டிரைவர், கண்டக்டர் மட்டுமில்லாம தற்காலிக டிரைவர், கண்டக்டர்களும் பணிபுரியறாங்க.
எதிர்காலத்துல, ஒப்பந்த அடிப்படையில டிரைவர், கண்டக்டர்கள பணிபுரிய அரசு போக்குவரத்து கழக அதிகாரிக நடவடிக்கை எடுத்துட்டு இருக்காங்க. அவங்க, 35 ஆயிரத்துல இருந்து, 50 ஆயிரம் ரூபா வரைக்கும் டெபாசிட் தொகை செலுத்தி, தற்காலிகமாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டரா பணிபுரியலாம்.
அவர்களுக்கு, எட்டு மணி நேர டூட்டி கணக்கிட்டு, நாளொன்றுக்கு 836 ரூபா சம்பளமா கொடுக்கறாங்க. எக்ஸ்ட்ரா டூட்டி பார்த்தா, கூடுதலா 690 ரூபா கொடுக்கறாங்க. இந்த நடவடிக்கையால, அரசு போக்குவரத்து கழகத்துல, வருங்காலத்துல நிரந்தர டிரைவர், கண்டக்டர் பணியிடமே இல்லாம போயிடும் போலிருக்குங்க, என, பஸ் ஊழியர்கள் அச்சத்தோட சொன்னாங்க.
ரோட்டுல இளசுகள் பயமுறுத்துறாங்க!
பொள்ளாச்சி - கோவை ரோட்டுல நண்பருடன் நின்று கொண்டிருந்தேன். அப்ப, இதுக்கு ஒரு முடிவு இல்லையா என, நண்பர் ஆரம்பித்தார். என்ன மேட்டர் என, விசாரிச்சேன்.
அதிக திறனுள்ள பைக்குகள இளவட்டங்கள் வேகமா ஓட்டுறாங்க. மக்கள் அதிகம் போகற ரோட்டுல, ரேஸ் வைத்து அசுர வேகத்துல போய் மிரட்டுறாங்க. அப்புறம், சைலன்சர் சவுண்டு அதிகமாக கேட்கணும் ஆல்ட்டர் பண்ணி ஓட்டுறாங்க. காத கிழிக்கற மாதிரி 'உர், உர்'னு சப்தம் எழுப்பிட்டு பைக் ஓட்டுறாங்க.
இந்த சவுண்ட் கேட்டு, வாகனத்தில போறவங்க எல்லாம் கவனம் சிதறி விபத்துக்குள்ளாகுறாங்க. நடந்து போகற குழந்தைகள், முதியவர்கள் எல்லாரும், பைக் சப்தம் கேட்டு பயந்து ரோட்டோரம் ஒதுங்கி போக வேண்டியிருக்கு. இதனால, மன உளைச்சல் தான் ஏற்படுது.
ெஹல்மெட் போடலைன்னா பைன் போடுற போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் இது பத்தி ஏன் கண்டுக்கறது இல்லைன்னு தெரியல.தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கிற இந்த நேரத்துலயாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினா நல்லாயிருக்கும்னு சொன்னார்.