அட்டகட்டி வரை டவுன் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்
வால்பாறை: வால்பாறையில் இருந்து, அட்டகட்டி வரையிலும் அரசு டவுன் பஸ் இயக்கவும், அதில், மகளிர் இலவசமாக பயணம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறை மலைப்பகுதியில், பல்வேறு வழித்தடங்களில், 38 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அரசு பஸ்களிலும், கடந்த ஆண்டு முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், வால்பாறையிலிருந்து ரொட்டிக்கடை, அய்யர்பாடி, கவர்க்கல், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதியை சேர்ந்த பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால், பழங்குடியின மக்கள் முதல் எஸ்டேட் தொழிலாளர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், வால்பாறையிலிருந்து வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, காடம்பாறை செல்ல, பொள்ளாச்சி செல்லும் பஸ்களில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதனால், அரசு அறிவித்த திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை உள்ளது. எனவே வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி வழியாக காடம்பாறை வரை டவுன் பஸ் இயக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.