அதிகரிப்பு

காரியாபட்டி: மாவட்டத்தில் சிறுவர்கள் டூவீலர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. சட்டப்படி குற்றம் என்பதால் விபத்து ஏற்படுத்தும் சிறுவர்களின் தந்தைக்கு அபராதம் விதிப்பதோடு, சிறை தண்டனையும் அளிக்கப்படுகிறது. டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாத வயதில் உள்ள இவர்களுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் டூவீலர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்கிற அளவிற்கு அத்தியாவசியமானதாக மாறி உள்ளது. காலத்திற்கு ஏற்ப மாற வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. அதே நேரம் சிறுவர்களை தைரியப்படுத்த வேண்டும், சாகசப்படுத்த வேண்டும் என்பதற்காக லைசென்ஸ் பெறாமலே டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட பெற்றோர் கற்றுக் கொடுக்கின்றனர்.

அதற்குப்பின் ஆர்வக்கோளாறு காரணமாக சிறுவர்கள் அதிக சக்தி கொண்ட டூவீலர்களை கேட்டு அடம் பிடித்து வாங்குகின்றனர். பெற்றோர்களும் பின் விளைவுகள் குறித்து யோசிக்காமல் டூவீலர்களை வாங்கி கொடுக்கின்றனர்.

டூவீலர்கள் ஒட்ட வாகன சட்டப்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே கியர் வாகனங்களை ஓட்ட முடியும். லைசென்ஸ் பெறாமலே டூவீலர்களை ஓட்டிச் செல்லும் சிறுவர்கள் அதிவேகமாக சாகசத்துடன், ரோட்டில் நடந்து செல்பவர்கள் சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடும் அளவிற்கு ஆபத்தான முறையில் ஓட்டிச் செல்கின்றனர்.

சில சமயங்களில் ஒரே டூவீலரில் 3க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஏற்றிக்கொண்டு சாகசம் செய்கின்றனர். ரேஸ் போட்டி நடத்துகின்றனர். வீலிங் செய்கின்றனர். வளைந்து நெளிந்து குறுக்கும் நெடுக்குமாக மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச் செல்கின்றனர்.

இவர்களை போலீசார் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதனால் பயமின்றி ரோடுகளில் சுற்றித் திரிகின்றனர். அதிவேகமாக செல்லும்போது நிலை தடுமாறி விழும் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

நடந்த பின் வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எதார்த்தமாக ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு செல்வதால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

சட்டப்படி குற்றம் என்பதால், விபத்து ஏற்படுத்தி விட்டு செல்லும் சிறுவர்களின் தந்தைக்கு அபராதம் விதிப்பதோடு சிறை தண்டனையும் அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் தென்காசியில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார். புதிய சட்டப்படி வாகன பதிவும் ரத்து செய்யப்பட உள்ளது. ஆகவே சிறுவர்கள் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Advertisement