பேவர் பிளாக் ரோடுகளில் மண்களால் சகதி; அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகளில் கிடக்கும் மண்களால் மழை நேரத்தில் சகதி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்குள்ள 33 வார்டுகளில் பெரும்பாலான தெருக்களிலும், பள்ளிவாசல் முதல் பெரிய கடை பஜார் வரையிலும் பேவர் பிளாக் ரோடுகள் உள்ளது. இந்த ரோடுகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள நிலையில் மண்கள் பரவலாக உள்ளது.
மேலும் பல்வேறு தெருக்களில் சிறு பாலங்கள் மற்றும் வாறுகால்கள் அமைக்கும் பணி நடப்பதால் அங்கு தோண்டி போடப்பட்டுள்ள மண்களும் அப்புறப்படுத்தாமல் கிடக்கிறது.
இதனால் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு மக்கள் நடந்து செல்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை 3:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை அவ்வப்போது பெய்த லேசான சாரல் மழையால் பேவர்பிளாக் ரோடுகளில் மண்களால் சகதி ஏற்பட்டது.
எனவே, பேவர் பிளாக் ரோடுகள் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள மண்களை முழு அளவில் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.