கோட்டூர்புரம் -- கிண்டி இடையே மினி பேருந்து சேவை துவக்கம்

சென்னை, கோட்டூர்புரம், நந்தனம்,சைதாப்பேட்டை பகுதி மக்கள், கிண்டி பல்நோக்கு மற்றும் முதியோர் மருத்துவமனைக்கு எளிதாக செல்ல நேற்று, மினி பேருந்து வசதி துவங்கப்பட்டு உள்ளது. மினி பேருந்து சேவையை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் பேசியதாவது:

சமீபத்தில் கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கிண்டி பல்நோக்கு மற்றும் முதியோர் மருத்துவமனைக்கு செல்ல பேருந்து வசதி வேண்டும் என, இப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கேட்டார்.

விசாரித்ததில், இங்கு இருந்து பஸ் வசதி தேவை என்று தெரிந்தது. உரிய ஆய்வுக்கு பின், மினி பஸ் இன்று முதல் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் முன், 32 சதவீத மகளிர் அரசு பேருந்துகளில் பயணித்தனர். தற்போது, கட்டணமின்றி, 57 சதவீதம் பேர் பயணிக்கின்றனர். இதுவரை, 600 கோடி முறை பயணித்துள்ளனர். இதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும், ஒரு மகளிர் 888 ரூபாய் சேமிக்கின்றார்.

தமிழகத்தில் அதிக வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கும் தொகுதியாக சைதாப்பேட்டை உள்ளது. இதுவரை, 26 பேருந்துகள் துவங்கி வைக்கப்பட்டு உள்ளன. இன்று 27வது பேருந்தாக, மினி பேருந்து துவங்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் ஆல்பிஜான் வர்கீஸ், அடையாறு மண்டல குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மினி பேருந்து வழித்தடம்

 கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் இருந்து, கிண்டி பல்நோக்கு மருத்துவமனை நோக்கி, காலை 6:30, 7:55, 9:25, 10:45, பகல் 12:05, 1:15, 2:40, மாலை 4:00, 5:20, 6:45 மணிக்கு மினி பேருந்து புறப்படும் கிண்டியில் இருந்து, பல்நோக்கு மருத்துவமனை, சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக காலை, 7:10, 8:40, 10:05, 11:25, பகல் 12:40, 2:05, 3:20, மாலை 4:40 ஆகிய நேரங்களில், கோட்டூர்புரம் ரயில் நிலையத்திற்கு புறப்படும்.

Advertisement