பணியை முடிக்க அவசரம் ரெட்டேரி நீர் வீணடிப்பு
சென்னை, சுற்றுச்சூழல் பூங்கா பணி முடிக்க ஒப்பந்ததாரர் அவசரம் காட்டுவதால், ரெட்டேரி நீர் அவசரகதியில் நீர்வளத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
மாதவரம், ரெட்டேரியை சென்னை குடிநீர் தேவைக்கும், உள்ளூர் சுற்றுலாவிற்கும் பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரியை ஆழப்படுத்துதல், சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள், 2024 மார்ச் மாதம் துவங்கி நடந்து வருகிறது.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, இந்த ஏரியை இரண்டாக பிரிக்கிறது. ஏரியின் ஒரு பகுதியில் பணிகள் 70 சதவீதம் முடிந்த நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால், ஏரிக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைத்தது.
ஏரியின் இரு புறமும் நீர் நிரம்பி தளும்பியது.
ஒப்பந்த பணியை முடிப்பதற்கு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதற்குள் பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனம் அவசரம் காட்டி வருகிறது. ஓரிரு மாதங்கள் வரை ஏரியில் நீரை தேக்கி வைத்தால், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
அதற்கு இடம் கொடுக்காமல், நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் நீர்வளத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். நீர்வளத்துறையின் இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை பொறியாளர்களிடம், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒப்பந்த பணியை எடுத்துள்ள உள்ளூர் ஆளுங்கட்சி முக்கிய புள்ளியின் 'அழுத்தம்' காரணமாகவே, தண்ணீரை திறந்துவிடுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.