விவசாயியிடம் ரூ.92,000 'அபேஸ்' 'பிக்பாக்கெட்' பெண்களுக்கு வலை
திருத்தணி,
திருவாலங்காடு ஒன்றியம், சந்தானகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ், 53; விவசாயி. இவரது மனைவி சாந்தி, 48; மகளிர் சுய உதவிக் குழு தலைவி.
இவர், குழுவில் கடன் வாங்கியவரிடம் இருந்து பணம் வசூலித்து, திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கட்டுவது வழக்கம்.
அந்த வகையில், வசூலான 2 லட்சம் ரூபாயை, சாந்தி நேற்று, தன் கணவரிடம் கொடுத்து வங்கியில் செலுத்தி வருமாறு கூறினார்.
அவரும், பிற்பகல் 2:30 மணிக்கு வங்கிக்கு சென்றுள்ளார். முதலில் 1.02 லட்சம் ரூபாயை குழு கணக்கில் கட்டினார்.
பின், மற்றொரு கடன் கணக்கில், 92,000 ரூபாய் கட்டுவதற்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து, பணத்தை பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொண்டு வரிசையில் நின்றிருந்தார்.
வங்கி அலுவலரிடம் விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு, பிளாஸ்டிக் கவரை பார்த்தபோது கவர் கிழிக்கப்பட்டு, பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
புகாரின்படி திருத்தணி போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மோகன்தாசின் பின்னால் ஒரு பெண் சுடிதார் அணிந்தும், மற்றொரு பெண் சேலை அணிந்தும் வரிசையில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனர்.
சிறிது நேரத்தில் இரண்டு பெண்களும் அவசரம் அவசரமாக வங்கியில் இருந்து வெளியேறியது தெரிய வந்தது. தப்பியோடிய இரண்டு பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.