நாட்டை துண்டாடுவது போல் பேசுவதா? ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!

''மத்திய அரசுக்கு எதிராக சண்டை போடுவதாக கூறியதன் வாயிலாக, நாட்டை துண்டாட விரும்புகிறவர்கள் பேசுகின்ற மொழியில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் பேசுகிறார்; இது கண்டனத்திற்குரியது,'' என, மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் பேசியுள்ளார்.

புரிந்து கொள்ளவில்லை



டில்லியில், கடந்த 15ம் தேதி, 'இந்திரா பவன்' என்ற பெயரில் அமைந்த காங்கிரஸ் புதிய தலைமை அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா மற்றும் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்ற இந்த விழாவில் பங்கேற்று, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.

அப்போது அவர், 'அரசியல் கட்சியான பா.ஜ.,வையோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.,சையோ எதிர்த்து நாம் சண்டையிடுகிறோம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். அவ்வாறு நினைத்தால், இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதையே, நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

'பா.ஜ., இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசியலைமப்பின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனங்களையும் கைப்பற்றிவிட்டது.

'எனவே, பா.ஜ., மட்டு மல்லாது, இந்திய அரசுக்கு எதிராகவும் நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை' என்று பேசியிருந்தார்.

அடிப்படை உரிமை



இந்த பேச்சுக்கு, பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று டில்லியில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் கூறியதாவது:

பொறுப்பான ஒரு பதவியில் இருக்கக்கூடியவர் ராகுல். அந்த பதவியில் இருப்பவர், பிரதமரையோ அல்லது பா.ஜ.,வையோ விமர்சிக்கிறார் என்றால், நாங்கள் புரிந்து கொள்ள முடியும். அதை கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், நாட்டையே விமர்சித்தால் எப்படி பொறுத்துக்கொள்வது. அவர் பேசியுள்ள பேச்சு, இந்திய அரசையே எதிர்ப்பதாக உள்ளது. இதன் வாயிலாக நாட்டை துண்டாக்க விரும்பும் சக்திகள் பேசுகின்ற மொழியிலேயே, அவரும் பேசுவதாக உள்ளது. இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், ராகுலை காப்பாற்றும் வகையில் பேசுகின்றனர். இந்திய அரசு என்பது, அரசின் நிறுவனங்களை குறிக்கிறது என, அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அடிப்படை உரிமைகளை பற்றி கூறக் கூடிய பிரிவு இது என்பதையே, அவர்கள் மறந்துவிட்டனர்.

இந்தியா என்ற நாட்டின் இறையாண்மையை நீங்கள் எதிர்க்கிறீர்கள். அதற்கு சவால் விடும் வகையில் பேசுகிறீர்கள். இந்திய அரசை எதிர்த்து சண்டை போடுவதாக கூறும் பேச்சு ஏற்கத்தக்கதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.




- நமது டில்லி நிருபர் -

Advertisement