பல்கலை வேந்தர் பதவியில் முதல்வர் இருக்க வேண்டும்: ஸ்டாலின் விருப்பம்
காரைக்குடி: பல்கலை வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் கட்டப்பட்ட வளர் தமிழ் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வள்ளல் அழகப்பர் பிறந்த மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி. கல்விக்காக வள்ளல் அழகப்பர் செய்துள்ள தொண்டு மிக முக்கியமானது. வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்துவிடக்கூடாது. வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது.
2 லட்சம் புத்தகங்கள்
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. மாணவர்களின் கல்விக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும். நூலகங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும். எனக்கு பரிசாக வந்த 2 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கி உள்ளேன். திமுக., தலைவராகப் பொறுப்பேற்ற பின் எனக்கு புத்தகங்களை மட்டும் பரிசளிக்கக் கூறினேன். அதனை நூலகங்களுக்கு அனுப்புவேன் என்றேன்.
இதுவரை என் கைக்கு 2.75 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. அதனை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். கொடையுள்ளமும், அறிவுத்தாகமும் கொண்டவர்கள் தங்கள் ஊர்களில் நூலகம் அமைக்க வேண்டும்; தங்களால் இயன்ற நூலங்களை அமைக்க வேண்டும். அருட் செல்வத்தை நீங்கள் தேடிச் சென்றால், பொருட் செல்வம் தேடி வரும். நான் முதல்வன் திட்டம் மூலமாக 22.56 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளோம்.
அதிகரிப்பு
புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. உயர் கல்வியை ஊக்குவிக்க மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.