சட்டவிரோத குவாரி விவகாரம்; 3500 கோடி ரூபாய் உடனே செலுத்தணும்; 6 நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

9


சென்னை: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்த குவாரி நிறுவனங்கள், 3500 கோடி ரூபாய் உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்து வரும் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அப்போதைய அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ, அமிகஸ் க்யூரி ஆக வக்கீல் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.


இந்த குழுக்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டன. முடிவில், சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. ஆய்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட தாது மணல் ஆலைகள் மூடப்பட்டன.


இந்த சூழலில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்த 6 நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கனிமத்தை எடுத்து விற்பனை செய்ததற்காக மொத்தம் 3500 கோடி ரூபாய், அரசுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


அதில், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 27 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாகவும், அதற்கான ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட மணல் 33.62 லட்சம் டன் என்று அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்திலும், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிமங்களுக்கான தொகையை குவாரி உரிமையாளர்களிடம் வசூலிப்பதற்கு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement