விண்வெளி, பாதுகாப்புத்துறையில் ரூ.50,000 கோடி முதலீடு: உ.பி., அரசு திட்டம்
பிரயாக்ராஜ்: விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் முதலீடு செய்ய உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், ஒரு லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் அமைச்சரவைக் கூட்டம் பிரயாக்ராஜில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தை விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பிரிவு உற்பத்தியில் நாட்டில் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு திறன்களை அதிகரிப்பது, புதுமைகளை உருவாக்குவது மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தை விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பிரிவில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ம் ஆண்டுகளில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையின் உற்பத்தியை 25 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராகவும் உயர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 2047க்குள் நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.,யில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையின் பங்களிப்பு 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.