இந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து தோல்வி
ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இந்தோனேஷியாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, வியட்நாமின் துய் லின் நுயென் மோதினர். முதல் செட்டை 20-22 என போராடி இழந்த சிந்து, 2வது செட்டை 12-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 37 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 20-22, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்சிதா ஸ்ரீ 17-21, 19-21 என ஜப்பானின் டொமோகா மியாசாகியிடம் வீழ்ந்தார். இந்தியாவின் தன்யா ஹேம்நாத் 14-21, 11-21 என தாய்லாந்தின் ரட்சனோக்கிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் அனுபமா 12-21, 5-21 என இந்தோனேஷியாவின் கிரிகோரியா மாரிஸ்கா துன்ஜங்கிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 12-21, 10-21 என தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 19-21, 19-21 என சீனாவின் ஷி யூ குய்யிடம் போராடி வீழ்ந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-18, 21-14 என இந்தோனேஷியாவின் அத்னன் மவுலானா, ஜமீல் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி 9-21, 13-21 என பிரிட்டனின் ஜென்னி, கிரிகோரி மெய்ர்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.