அபிஷேக் சர்மா விளாசல்... இந்தியா அசத்தல் * 20 பந்தில் அரைசதம் * வீழ்ந்தது இங்கிலாந்து

கோல்கட்டா: அபிஷேக் சர்மா 20 பந்தில் அரைசதம் விளாச, முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை.
வருண் அபாரம்
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், டக்கெட் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், 3வது பந்தில், பில் சால்ட்டை 'டக்' அவுட்டாக்கினார். தனது அடுத்த ஓவரில் டக்கெட்டை (4) வெளியேற்றினார் அர்ஷ்தீப். இங்கிலாந்து அணி 7 ஓவரில் 61/2 ரன் எடுத்தது.
போட்டியின் 8வது ஓவரை வீசினார் வருண் சக்ரவர்த்தி. இதன் 3, 5வது பந்தில் ஹாரி புரூக் (17), லிவிங்ஸ்டனை (0) அவுட்டாக்கினார் வருண். கேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர், 34 வது பந்தில் அரைசதம் எட்டினார்.
அக்சர் படேல் சுழலில் ஓவர்டன் (2), அட்கின்சன் (2) வெளியேறினார். வருண் பந்தில் பட்லர் (68) அடித்த பந்தை அசத்தலாக 'கேட்ச்' செய்தார் நிதிஷ் குமார். ஆர்ச்சர் 12 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் சாய்த்தார்.
அபிஷேக் அசத்தல்
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. அட்கின்சன் வீசிய இரண்டாவது ஓவரில், 4 பவுண்டரி, 1 சிக்சர் என 22 ரன் விளாசினார் சாம்சன். அபிஷேக் சர்மா தன் பங்கிற்கு ஆர்ச்சர் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என அடித்தார். இந்திய அணி 4 ஓவரில் 39/0 ரன் எடுத்தது.
5வது ஓவரை வீசிய ஆர்ச்சர், 2வது பந்தில் சாம்சனை (26) அவுட்டாக்கினார். 5வது பந்தில் சூர்யகுமாரை 'டக்' அவுட்டாக்கினார். மார்க் உட் வீசிய 6வது ஓவரில் மிரட்டிய அபிஷேக், 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். 'பவர் பிளே' ஓவர் (6) முடிவில் இந்தியா 63/2 ரன் எடுத்தது.
ரஷித் ஓவரில் (8வது) 4, 6, 6 என தொடர்ந்து விளாசிய அபிஷேக், ஓவர்டன் பந்தில் சிக்சர் அடித்து, 20 பந்தில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 10 ஓவரில் 100/2 ரன் எடுத்தது. அட்கின்சன் ஓவரிலும் அபிஷேக், 6, 4 என அடிக்க, இந்திய அணி வெற்றியை வேகமாக நெருங்கியது. அபிஷேக் 79 ரன்னில் அவுட்டானர்.
கடைசியில் திலக் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 12.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 'டி-20' தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. பாண்ட்யா (3), திலக் வர்மா (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்து சென்னையில்...
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது 'டி-20' போட்டி, வரும் 25ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.

அர்ஷ்தீப் 'நம்பர்-1'
நேற்று சால்ட், டக்கெட்டை அவுட்டாக்கிய அர்ஷ்தீப், சர்வதேச 'டி-20' ல் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் ஆனார். இவர், 61 போட்டியில் 97 விக்கெட் சாய்த்துள்ளார். சகால் (80ல், 96 விக்.,) இரண்டாவதாக உள்ளார்.
* நேற்று 2 விக்கெட் சாய்த்த ஹர்திக் பாண்ட்யா (111ல் 91), இந்த வரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். புவனேஷ்வர் குமார் (87ல் 90 விக்.,), பும்ரா (70ல் 89) 4, 5வது இடங்களில் உள்ளனர்.

யுவராஜுக்கு அடுத்து
இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' அரங்கில் யுவராஜ் சிங்கிற்கு (12 பந்து, 2007) அடுத்து அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் ஆனார் அபிஷேக் சர்மா. நேற்று இவர் 20 பந்தில் அரைசதம் விளாசினார்.

அதிவேக வெற்றி
கோல்கட்டா போட்டியில் இந்திய அணி, 43 பந்து மீதம் உள்ள நிலையில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' அரங்கில் பந்து அடிப்படிடையில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இது. இதற்கு முன் 2012ல் புனே, 2021 ஆமதாபாத் போட்டிகளில் 13 பந்து மீதம் இருந்த போது இந்தியா வென்றது.

Advertisement