ஆஸி., ஓபன்: அரையிறுதியில் ஸ்வியாடெக், மடிசன் கீஸ்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு ஸ்வியாடெக், மடிசன் கீஸ் முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 'நம்பர்-2' வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் நவாரோ ('நம்பர்-8') மோதினர்.
முதல் செட்டை ஸ்வியாடெக் 6-1 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம் 31 நிமிடம் நடந்த இப்போட்டியில் ஸ்வியாடெக் 6-1, 6-2 என எளிதாக வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் ('நம்பர்14'), உக்ரைனின் ஸ்விட்டோலினாவை ('நம்பர்-27') சந்தித்தார். ஒரு மணி நேரம் 54 நிமிடம் நடந்த போட்டியில் மடிசன் கீஸ், 3-6, 6-3, 6-4 என வெற்றி பெற்றார்.
அரையிறுதியில் ஸ்வியாடெக்-மடிசன் கீஸ் மோதுகின்றனர்.
சின்னர் அசத்தல்
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 'நம்பர்-1', இத்தாலியின் சின்னர், ஆஸ்திரேலியாவின் டி மினாரை ('நம்பர்-8') எதிர்கொண்டார். ஒரு மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், சின்னர் 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஷெல்டன், 6-4, 7-5, 4-6, 7-6 என்ற செட்டில் இத்தாலியின் சொனேகோவை சாய்த்து, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
14 'கேம்'
ஆஸ்திரேலிய ஓபனில் (2025ல்) ஸ்வியாடெக், இதுவரை மோதிய 5 போட்டியில் எதிர் வீராங்கனைகளுக்கு ஒரு செட் கூட விட்டுத்தரவில்லை. மொத்தம் 14 கேம் மட்டும் தான் எடுக்க விட்டார். முன்னதாக 2013ல் ரஷ்யாவின் ஷரபோவா, அரையிறுதிககு முன், 15 கோம் விட்டுத் தந்திருந்தார்.
மாறுமா விதி
நேற்று ஸ்வியாடெக், நவாரோ மோதினர். இரண்டாவது செட் 2-2 என இருந்த போது, நவாரோ பந்தை திருப்பி அடித்தார். வழக்கமாக பந்து மைதானத்தில் படும் முன் அல்லது, ஒரு முறை 'பிட்ச்' ஆனவுடன் திருப்பி அடிக்க வேண்டும். ஆனால் ஸ்வியாடெக், பந்து இரண்டாவது முறை 'பிட்ச்' ஆன பின் திருப்பி அனுப்பினார்.
விதிப்படி உடனே அம்பயரிடம் முறையிடாத நவாரோ, தொடர்ந்து விளையாடி 'கேமை' இழந்தார் (2-3). பின் வீடியோ 'ரிவியூ' முறையில் 'செக்' செய்யுமாறு நவாரோ கேட்டார். இதை அம்பயர் ஏற்க மறுத்தார். இதனால் வீடியோ 'ரிவியூ' முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.