நின்ற கார் மீது மோதிய கன்டெய்னர் லாரி சேலம் பைனான்சியர் உட்பட இருவர் பலி
ஓசூர்:சூளகிரி அருகே, நின்றிருந்த கார் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், சேலம் பைனான்சியர் உட்பட இருவர் பலியாகினர். கன்டெய்னர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே குரால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 56. குரால் நத்தம் முன்னாள் பஞ்., தலைவர்; தி.மு.க., உறுப்பினர். சேலம் கன்னங்குறிச்சியில் வசிக்கிறார்.
இவரது மனைவி நிர்மலா, 50, ஆசிரியை. இவர்களது மகன் ராகவ் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்க, இருவரும் நேற்று, 'மாருதி சுசூகி பலேனோ' காரில் ஓசூர் சென்றனர். சேலத்தை சேர்ந்த சிவசங்கர், 56, காரை ஓட்டினார்.
கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அருகே சின்னாறு பகுதியில் மதியம், 2:30 மணிக்கு, சாலையோரம் காரை நிறுத்தி விட்டு, வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவை, கணேசன் மற்றும் டிரைவர் சிவசங்கர், காரின் பின்பகுதியில் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சேலத்திலிருந்து, பெங்களூரு நிறுவனத்திற்கு லோடு ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி, காரின் பின்பகுதியில் அதிவேகமாக மோதி கவிழ்ந்தது. இதில், பைனான்சியர் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த டிரைவர் சிவசங்கர், நிர்மலா ஆகியோரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியிலேயே சிவசங்கர் உயிரிழந்தார். நிர்மலா சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்திற்கு காரணமான சேலத்தை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் கங்காதரன், 45, என்பவரை, சூளகிரி போலீசார் கைது செய்தனர்.