வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதுநிலை குளறுபடிகள், பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வுகாணும் பொருட்டு அனைத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். வி.ஏ.ஓ.,க்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்குவதற்காக வெளியிடப்பட்ட அரசாணைகளை தாமதமின்றி விதி திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.
இளநிலை உதவியாளர் முதல் தாசில்தார் வரை பொதுக் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலாளர் பால்பாண்டி கோரிக்கையை விளக்கினார். மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ், மகளிரணி செயலாளர் மங்களேஸ்வரி பேசினர். மாவட்ட தலைவர் கண்ணன், அரசுப் பணியாளர் சங்க செயலாளர் முத்துராஜா, கிராம உதவியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் சந்தியா உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் சங்கு நன்றி கூறினார்.