'டிரம் ஷீடர்' கருவியால் நேரடி நெல் விதைப்பு
அலங்காநல்லுார்: நெல் நாற்று வளர்த்து நடவு செய்யும் முறைக்கு மாற்றாக நேரடியாக 'டிரம் ஷீடர்' கருவி மூலம் விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அலங்காநல்லுார், சோழவந்தான் பகுதிகளில் வைகை, பெரியாறு பாசனத்தில் இரு போக நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது. நாற்றங்கால் அமைத்து 28 நாட்கள் வளர்ந்த நாற்றுக்களை பறித்து வயலில் தொழிலாளர்கள் மூலம் நடவு செய்வர். அதன்பின் இயந்திர நடவு அறிமுகம் செய்யப்பட்டது.
சில ஆண்டுகளாக 'டிரம் ஷீடர்' மூலம் விதையை நேரடியாக நிலத்தில் விதைப்பு செய்யும் முறையை துவங்கி உள்ளனர். மேலசின்னணம்பட்டி விவசாயி மணிகண்டன் கூறியதாவது: வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நாற்றங்காலுக்கு ஏக்கருக்கு 30 கிலோ நெல் தேவைப்படும். 'டிரம் ஷீடர்' முறையில் 10 கிலோ நெல் போதுமானது. இந்த கருவியை ஒருவர் இயக்கலாம். ஒரு ஏக்கரில் 2 மணி நேரத்தில் விதைப்பு செய்யலாம். கூலி ஆட்கள் தேவையில்லை. இம்முறை விதைப்பால் 10 நாட்கள் முன்பாகவே அறுவடை செய்யலாம். கூடுதல் மகசூல் கிடைக்கும் என்றார்.