கொள்முதல் இல்லாமல் தேங்கும் நெல்மூடைகள்: விவசாயிகள் குமுறல் * கொங்கம்பட்டி விவசாயிகள் குமுறல்
மேலுார்: கொங்கம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
கொங்கம்பட்டியில் சமீபத்தில் அறுவடையான நெல்லை விவசாயிகள் சொசைட்டிக்கு சொந்தமான இடத்தில் சேமித்து வைத்துள்ளனர். அறுவடையாகும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்படும். இந்தாண்டு இதுவரை நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் 4 நாட்கள் திறந்த வெளியில் நெல் வீணாகி வருகிறது.
விவசாயி சாகுல் ஹமீது கூறியதாவது: கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் செலவு செய்து நெல் உற்பத்தி செய்துள்ளோம். இதுவரை கொள்முதல் செய்யாததால் பத்தாயிரம் நெல் மூடைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பாழாகிறது. இரவு பகலாக நெல்லை பாதுகாக்க காத்து கிடந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். கொள்முதல் செய்யும் இடத்தில் நெல்லை சேமிக்க இடமில்லை. இதனால் அறுவடைக்கு காத்திருக்கும் நெல்லும் வயலில் வீணாகிறது.
மண் தரையில் நெல்லை கொட்டி வைத்து 4 நாட்கள் ஆவதால் நெல் முளைத்து வீணாகும் அவலம் நிலவுகிறது. பிற பகுதிகளில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ நெல் மூடையை ரூ.980 க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தனியார் ரூ. 740க்கு வாங்குவதால் ஒரு மூடைக்கு ரூ.240 நஷ்டமாகிறது. நெல் குவித்து வைத்துள்ள இடத்திற்கு சொசைட்டியில் இருந்து தரை வாடகை கேட்பதால் மேலும் பாதிக்கிறோம். கலெக்டர் நெல் கொள்முதல் செய்ய உதவ வேண்டும் என்றார்.