தண்ணீர் தொடங்கி, நாய்கள் வரை பிரச்னைகள் புலம்பலில் கே.எம்.ஏ.,நகர் குடியிருப்போர்
திண்டுக்கல்: குடிநீர் குழாய் இருந்தும் தண்ணீர் இல்லை, தெரு நாய்கள்,மாடுகள், கடித்து குதறும் கொசுக்கள் என பிரச்னை தீர்வுக்காக போராடும் நிலையில் திண்டுக்கல் கே.எம்.ஏ.,நகர் குடியிருப்போர் உள்ளனர்.
திண்டுக்கல் கே.எம்.ஏ.,நகர் குடியிருப்போர் நலச்சங்க கவுரவ தலைவர் நாகராஜன், தலைவர் பழனிசாமி, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சவுந்திரராஜன் கூறியதாவது: திண்டுக்கல் பழைய கரூர் ரோடு கே.எம்.ஏ.,நகர்,இந்திராகாந்திநகர்,தந்தை பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக தண்ணீர் பிரச்னை தான் பிரதானமாக உள்ளது. பைப்லைன் போடப்பட்டிருந்தாலும் காவிரி கூட்டுகுடிநீருடன் இணைக்காததால் தண்ணீர் கிடைப்பதில்லை.
சுற்றுப்பகுதிகளில் சிலர் மது குடிப்பது,திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
போலீசார் அவ்வப்போது ரோந்து மேற்கொள்ள வேண்டும். எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் டூவீலர், கார்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துகின்றன. சில நேரங்களில் வெறி பிடித்து கடிக்க பாய்கின்றன.
புகார் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். மழை நேரங்களில் கழிவுநீர் செல்ல வடிகால்கள் இல்லாமல் ரோடுகளில் மழைநீர் தேங்கி மக்களை பாடாய்படுத்துகிறது.
கொசுக்கள் கடித்து குதறுகின்றன. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. மாடுகளும் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. பாம்புகளும் அதிகளவில் வீட்டிற்குள் வருகிறது. இதனாலே அச்சத்துடனே இருக்கிறோம் என்றனர்.