குவாரிகளில் 2வது நாளாக அளவிடும் பணி மேற்கொண்ட கனிம வளத்துறை அதிகாரிகள்
புதுக்கோட்டை: திருமயம் அருகே துளையானூர், மலைக்குடிபட்டி பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களுரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர்அலி, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக, கூறி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து சில தினங்களிலேயே அவர் மீது, மினி லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஒருவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் குறிப்பிட்ட ஆர்.ஆர்., என்னும் கல் குவாரியில் நேற்றுமுன் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்று துளையானூர் ஊராட்சியில் உள்ள அரசு அனுமதி வழங்கப்பட்ட பாலு என்பவருடைய கல்குவாரியிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், துளையானூர், மலைக்குடிபட்டி பகுதிகளில் உள்ள அனைத்து கல் குவாரிகளும் உரிய அனுமதியோடு இயங்குகின்றதா, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், நேரடியாகவும், ட்ரோன் மூலமாகவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வு மற்றும் அளவிடும் பணி முடிவடைந்ததும், சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டை கனிமவளத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.