பீஹாரில் மாவட்ட கல்வி அதிகாரி வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல்
பாட்னா : பீஹாரைச் சேர்ந்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 2 கோடி ரூபாய் பணம் மற்றும் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பீஹாரில் உள்ள மேற்கு சம்பாரனில் டி.இ.ஓ., எனப்படும் மாவட்ட கல்வி அதிகாரியாக இருப்பவர் ரஜினிகாந்த் பிரவீன்.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் ரஜினிகாந்த் தற்போது பணியாற்றும் அலுவலகம் மற்றும் ஏற்கனவே பணியாற்றிய பாட்னா, முசாபர்நகர், மதுபானி ஆகிய ஊர்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. பணம் எண்ணும் இயந்திரம் வைத்து அவற்றை எண்ணியதில், 2 கோடி ரூபாய்க்கு மேல் கையிருப்பில் இருந்தது தெரிந்தது. இந்த தகவல் அறிந்ததும், ரஜினிகாந்தை கல்வித்துறை சஸ்பெண்ட் செய்தது.