2024ல் 306 கஞ்சா வழக்குகளில் 496 பேர் கைது

திண்டுக்கல் : ''2024ல் 306 கஞ்சா வழக்குகளில் 496 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,''என திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் தெரிவித்தார்.

ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா...



ரவுடிகள் 125 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023ல் 112 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 2024ல் நடந்த 63 வழிப்பறி வழக்குகளில் 60 பேர் கைது செய்யப்பட்டு திருடு போன பொருட்கள் மீட்கப்பட்டது. 24 வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கொலைகளை தடுக்க வழி



மாவட்டத்தில் 2024ல் 47 கொலை நடந்ததில் இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 71 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடக்கிறதே...



2024ல் 248 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளும், 12 கற்பழிப்பு வழக்குகளும், 336 பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தும், நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தருவதிலும் கவனம் செலுத்தினோம்.80 வழக்குகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 11 பேர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீஸ் அக்கா திட்டத்துக்கு வரவேற்பு உள்ளதா...



கல்லுாரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ற போலீஸ் அக்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் செயல்படும் ஒவ்வொரு கல்லுாரிக்கும் ஒரு பெண் எஸ்.எஸ்.ஐ., தலைமை போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மூலம் மாணவிகளை தொடர்ந்து கண்காணிக்கிறோம். மத்தியிலும் வரவேற்பு உள்ளது.

சாலை விதிகளை மீறுவோர் மீது என்ன நடவடிக்கை...



சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுகிறது. 2024ல் விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ.20.67 கோடி அபராதமாக பெறப்பட்டுள்ளது.

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை



கஞ்சாவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் உள்ளனர். 2024ல் 306 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 496 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 185.638 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா பயன்பாடுகளும் உள்ளதே...



தடை குட்கா குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகிறது. பதுக்கியவர்கள் கைது செய்யப்படுகின்றனர். குற்றங்களை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Advertisement