ஆர்.என்.ஆர்., சன்ன ரகத்திற்கு மவுசு குறைந்தது டீலக்ஸ் ரக கொள்முதல்

காரைக்குடி : சாக்கோட்டை வட்டாரத்தில், விவசாயிகள் அதிக அளவில் டீலக்ஸ் ரகநெல் சாகுபடி செய்துஉள்ள நிலையில், அதற்கு போதிய விலை கிடைக்காததாலும் கொள்முதல்செய்ய யாரும் முன்வராததாலும் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் டீலக்ஸ், ஆர்.என்.ஆர்., மற்றும் ஜே.சி.எல்., ரகம், ஏ.எஸ்.டி 16 எனும் குண்டு ரகம் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள், உழவு, உரம், விதை என ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர்.தற்போது தை பிறந்ததையொட்டி விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாங்கள்சாகுபடி செய்துள்ள டீலக்ஸ் ரக நெல்லை வாங்குவதற்கு புரோக்கர்களோ அரிசி ஆலைகளோ முன்வரவில்லை என்றும், இதனால் அறுவடை முடிந்தும் நெல் மூடைகளை விற்க முடியாமல் தேக்கி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனை சரி செய்ய, விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துஉள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், தற்போது, பொதுமக்கள் ஆர் என்.ஆர். என்னும் சன்ன ரகத்தையே அதிக அளவில் விரும்பி வாங்கத்தொடங்கியுள்ளனர். டீலக்ஸ் ரக நெல் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் சில அரிசி ஆலைகளில் டீலக்ஸ் வாங்க மறுத்திருக்கலாம். சில ஆலைகளில் டீலக்ஸ் ரகங்கள் வாங்கப்படுகிறது.

வேளாண் அதிகாரிகள் கூறுகையில், டீலக்ஸ் நெல் ரகங்கள் ஈரப்பதம் உடையவை. இவற்றை உடனே விற்பனை செய்வது கடினம். விவசாயிகளுக்கு, மிகக்குறைந்த வாடகையில் நெல் மூடைகளை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்துவதில்லை.

தவிர பொது சேகரிப்பு மையம் அமைத்து சுற்றுவட்டாரத்தில் உள்ள நெல் மூடைகளை சேகரிக்கும் போது வியாபாரிகளும் எளிதாக வாங்கிச் செல்ல முடியும். இதற்கும் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். தற்போது, சாக்கோட்டை வட்டாரத்தில் ஜெயங்கொண்டான், ஆம்பக்குடி ஆகிய இரண்டு இடங்களில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல்நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertisement