உ.பி.யில் கொடூரம்: வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து கொலை
லக்னோ: உ.பி., மாநிலத்தில் வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நவாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (12). இவர் பக்சா கிராமத்தில் வசிக்கும் தமது மாமா வீட்டுக்கு வந்துள்ளார். அவரின் மகன் அபிஷேக்(14).
சிறுவர்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. கிராமத்தின் பல பகுதிகளில் அவர்களை குடும்பத்தினர் தேடியும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இந் நிலையில் மறுநாளான வெள்ளியன்று (ஜன.24) இருவரின் சடலங்கள் அங்குள்ள கடுகு வயலில் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் கைகள், கால்கள் கட்டப்பட்டு, கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் வாயில் துணி வைத்தும் திணிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றினர். இதுகுறித்து காவல்துறை எஸ்.பி., கவுரவ் குரோவர் கூறியதாவது;
புகாரின் பேரில் இரண்டு சிறுவர்களையும் தேடி வந்தோம். காணாமல் போன மறுநாள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. முழு விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.