ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தேர்தல் கமிஷன்; பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி: ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவதற்கான இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் முன்மாதிரியான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி கூறியதாவது: துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவது, ஓட்டளிக்கும் உரிமையைப் பயன்படுத்த அதிகாரம் அளிப்பதும் ஆகும்.
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை தேசிய வாக்காளர் தினம் உணர்த்துகிறது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் முன்மாதிரியான முயற்சிகளை பாராட்டுகிறேன். ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை ஓட்டளிக்க செய்ய வேண்டும், ஓட்டளிக்கவில்லை என்றால் கேள்வி எழுப்ப வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேச வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் அட்டையை பெற்று ஓட்டளிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், என்றார்.
99 கோடி வாக்காளர்கள்!
சென்னையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியதாவது: இந்தியாவின் வாக்காளர்களின் எண்ணிக்கை 99 கோடியாக உள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 பொதுத்தேர்தலில் 65 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது என்றார்.