'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'... கவர்னர் மாளிகைக்குள் மம்தாவுக்கு அனுமதி மறுப்பு
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடந்த குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிறிது நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டின் 76வது குடியரசு தின விழாவையொட்டி,மேற்கு வங்க மாநிலத்தின் கவர்னர் மாளிகையிலும் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்க கோல்கட்டா போலீசாரின் இசைக்குழுவுடன் முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார். அப்போது, கவர்னர் மாளிகைக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எஸ்.எஸ்.பி., எனப்படும் சாஷ்திரா சீமா பால் குழுவின் இசை நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், கோல்கட்டா போலீசாரின் இசைக்குழுவினரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று ராஜ்பவன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மம்தா பானர்ஜி, கேட் அருகே சிறிது நேரம் காத்திருந்தார். அதன்பிறகு, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், 'ஆண்டுதோறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கோல்கட்டா போலீசாரின் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். எஸ்.எஸ்.பி., குழுவினர் இசை நிகழ்ச்சிக்கு எந்த எதிர்ப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த சமயத்தில் கோல்கட்டா இசைக்குழுவை வெளியே நிறுத்தப்பட்டது தேவையற்றது. இது மிகவும் மோசமான செயல்,' எனக் குறிப்பிட்டார்.