டாவோஸ் மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் சந்திப்பு

1

சென்னை: டாவோஸ் மாநாட்டில் தமிழக குழுவினர், 50க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தினர் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப்பொருளாதார அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான மாநாட்டில், தமிழகம் சார்பில் 50க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுடன் சந்திப்புகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழிற்கட்டமைப்புகள், தொழில் தொடங்குவதற்கான சூழல், வாய்ப்புகள் பற்றி வெளிநாட்டு நிறுவனத்தாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் திமுக அரசு சாதித்தது என்ன? என கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்கட்சி கட்சித் தலைவர் பழனிசாமி.

பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என்பதை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே தெரியும். இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து கொள்ளாமல் அறிக்கை விட்டிருக்கிறார் அவர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1960-61ல் 8.7 சதவிகிதமாக இருந்தது. அது 2023-24ல் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனி நபர் வருவாயை பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சராசரி 2023-24 ல் 171.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும் 2023-24 நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30 சதவிகித பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது. உலக நாடுகள் வியக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்கட்டமைப்பும், பெண்களின் பங்களிப்பும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கவனம் ஈர்த்துள்ளன.


ஆனால் மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையுமில்லாமல் வெறும் அவதுாறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ 'கிண்டி'த் தருவதை கவர்னரும் எதிர்கட்சித் தலைவரும் மென்று கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Advertisement