உலக நாடுகளில் இந்திய குடியரசு தினம் கோலாகலம்
காத்மண்டு: இந்தியாவின் 76வது குடியரசு தினம் பெரும்பாலான உலக நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இது குறித்த விவரம்
பிரிட்டன்
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் விக்ரம் துரைசாமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில்,அந்நாட்டில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, தூதரகத்தில் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடந்தன.
கத்தார்
கத்தாரின் தோஹா நகரில் உள்ள இந்திய கலாசார மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி விபுல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஜனாதிபதியின் உரையை வாசித்தார். மஹாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குவைத்
குவைத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தூதர் ஆதர்ஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததுடன், மஹாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.பிறகு ஜனாதிபதியின் உரையை வாசித்தார். இந்தியாவின் கலாசாரத்தை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர்.
நேபாளம்
நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா நடந்தது. இந்திய தூதர் நவீன் ஸ்ரீநிவஸ்தவா தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஜனாதிபதியின் உரையை வாசித்தார். அப்போது பீம்பே யுபிஐ பயன்பாடு காரணமாக, நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
ஷாங்காய்
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிகாரி பிரதீக் மாத்தூர் தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து நடனம், இசை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.
தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்காவில் நடந்த குடியரசு தின விழாவில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். இந்திய தூதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஜனாதிபதியின் உரையை வாசித்தார்.
யு.ஏ.இ.,
ஐக்கிய அரபு எமிரேட்சில்(யு.ஏ.இ.,) குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. துபாயில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடந்த விழாவில், இந்திய தூதர் சஞ்சய் சுதீர், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ஜனாதிபதியின் உரையை வாசித்தார். பிறகு இந்தியாவின் பெருமையை விளக்கும் வகையிலான கண்காட்சி நடந்தது. தேசப்பற்றை போற்றும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
உக்ரைன்
உக்ரைனின் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தூதர் ரவி சங்கர் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பிறகு, ஜனாதிபதியின் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், ஏராளமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.
சவுதி அரேபியா
சவுதி அரேபியாவிலும், இந்திய தூதரகத்தில் நடந்த விழாவில், தேசியக்கொடியை ஏற்றி வைத்த இந்திய தூதர் சுஹேல் அஜாஜ் கான் ஜனாதிபதியின் உரையை வாசித்தார். அங்கு இருந்த மஹாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதேபோல், மேலும் பல நாடுகளிலும் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.