வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது; திருமா பேட்டி

41


சென்னை: 'வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.


சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:
வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது. அங்கே உள்ள வழக்கமான போலீஸ் குற்றப்பிரிவை சார்ந்தவர்கள் விசாரிக்க கூடாது.
சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என்று கோரிக்கையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை நியமிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் மீதே, இவர்கள் தான் அந்த குற்றத்தை செய்தார்கள் என்று வழக்கு பதிவு செய்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

சமூக நீதி



சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என்று வி.சி.க., வேண்டுகோள் விடுக்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். தி.மு.க., அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க இந்த அரசு துணையாக நிற்கும் என்று நம்புகிறோம். போலீசாரின் இந்த போக்கை ஏற்க முடியாது. சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

விஜய் பேசவில்லை



பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். சீமானின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஏன் இவ்வாறு பேசுகிறார்? இப்படி செயல்படுகிறார் என்று தெரியவில்லை. இது அவருக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது அல்ல.
வேங்கைவயல் குறித்து விஜய் எந்த கருத்தும் சொன்னதாக தெரியவில்லை. அவர் வேங்கை வயல் மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக கூறியது ஆறுதல் தந்தது. வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக, ஜனவரி 27ம் தேதி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

Advertisement